தி.மு.கழக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மு.பெ.சாமிநாதன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் பேசிய ஸ்டாலின்,
இந்த இனியதொரு மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்திவைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய சிறப்பானதொரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் பெருமைப்படுகிறேன். அதற்காக நான் சாமிநாதன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு நான் உள்ளே வருகின்ற நேரத்தில் சாமிநாதன் நன்றியுரை ஆற்றுகிறபோது குறிப்பிட்டுச்சொன்னார், “ஒரு மாநாடு போல்” என்று. உணமைதான், மாநாட்டிற்கு என்னென்ன சிறப்பு இருக்குமோ, அத்துனை சிறப்புகளும் - ஏதோ இது திருமண விழா நம்முடைய இல்லத்தோடு முடித்துக்கொள்ளலாம், உறவினர்களை மட்டும் அழைத்து முடித்துக்கொள்ளலாம், கட்சியினரை மட்டும் அழைத்து முடித்துக்கொள்ளலாம் என்று நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், சாமிநாதன் அவர்கள் இந்த திருமணம் குடும்பத் திருமணமாக இருந்தாலும், இது கழக குடும்பத் திருமணமாக அமைய வேண்டும் என்ற நிலையில் - ஒரு மாநாடுபோல், மாநாட்டிற்கு எந்தெந்த பணிகள் எல்லாம் ஆற்ற வேண்டுமோ அந்த நிலையில், உரையாற்றுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ஒருவரையும் விட்டுவிடாமல் குறிப்பிட்டுச் சொன்னார். அதுதான் சாமிநாதன். பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருப்பார்.
ஆனால், அவர் எடுத்து வைக்கும் பணிகள், சொல்லக்கூடிய கொள்கை, இலட்சியம், அழுத்தம், உள்ளபடியே பாராட்டப்படவேண்டிய ஒன்றாக அவர் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய திருமணத்தை 1990ம் ஆண்டு இதே திருப்பூரில் நான் நடத்தி வைத்திருக்கிறேன் என்று இங்கு சொன்னார்கள். மணவிழா மலர் வெளியிடப்பட்டபோது, புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தினை நான் உற்று உற்று பார்த்தேன். அந்த புகைப்படத்தில் 'கோட் சூட்' அணிந்து கொண்டு, எந்த முகபாவத்தோடு இருக்கின்றாரோ, அதே முகபாவத்தோடு தான் இன்றும் இருக்கிறார்.
நான் கூட கொஞ்சம் மாறி இருக்கலாம், 'போட்டோவில் சொல்கின்றேன்'!
கொள்கையிலும் இலட்சியத்திலும் மாறவில்லை!!
1990ல் அவருடைய திருமணத்தை நான் தலைமை ஏற்று நடத்திவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கு 2019ல் அவருடைய மகன் ஆதவன் அவர்களுக்கும் திருமணம் நடத்திவைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத்தான் அவர்களும் சொன்னார்.
அவருடைய மகனுக்கு மட்டுமல்ல, அவருக்கு பிறக்கக்கூடிய பேரன் பேத்திகளுக்கும் நான்தான் வந்து திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இப்போதே தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக மணமக்கள் அவசரப்பட்டுவிடக்கூடாது 'பொறுத்தார் பூமியாள்வார்'.
நாம் பொறுத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, படிப்படியாக நம்முடைய சாமிநாதன் அவர்கள் வளர்ச்சி பெற்றிருப்பதை நான் நினைத்துப்பார்க்கின்றேன். இளைஞர் அணியில் உறுப்பினராக ஒன்றிய அளவில் இருந்து பணியாற்றி, அதற்குப் பிறகு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் துணை அமைப்பாளராக கடமையை நிறைவேற்றி, அதன் பிறகு மாவட்ட அமைப்பாளராகவும் இடையில் மாவட்டக் கழகத்தின் செயலாளராகவும், நான் இளைஞர் அணியில் செயலாளராக இருந்தபோது எனக்கு துணை நின்று துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து பணியாற்றி, அதற்குப் பின்னால் இணைச் செயலாளராகவும், நான் செயல் தலைவராக பொறுப்பேற்றதற்குப் பின்னால், இளைஞர் அணியில் செயலாளராகவும் பொறுப்பேற்று இன்றைக்கு கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் உறுப்பினர்களில் ஒருவராக இருந்து அவர் இயக்கத்திற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்.
இடையில் அவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்திருந்த அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவ்வாறு பேசினார்.