நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகை ஒன்றியத்தில், ஒரே நாளில் 13 கிராம பஞ்சாயத்துகளில் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களை சந்தித்தார்.
அவருடன் BDO, துணை BDO, VAO, ஊராட்சி செயலார்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
காலை 9.30 மணிக்கு முட்டம் கிராமத்தில் தொடங்கிய சந்திப்புகள் மாலை 7 மணி அளவில் ஆழியூரில் நிறைவுற்றது.
ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் மனுக்களை அளித்தனர். பலர் தங்களின் வேண்டுகோள்களையும் எம்.எல்.ஏ. அவர்களிடம் முன்வைத்தனர்.
முகாம் நடைப்பெற்ற இடங்களை தாண்டி, செல்லும் வழிகளிலும் மக்கள் வழிமறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.
100 நாள் வேலைத்திட்ட பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு சம்பளம் சரியாக போகிறதா? என்பதையும் கேட்டறிந்தார். புதர்களில் வேலை செய்யும்போது பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் இருக்கும் என்பதால் கவனமாக பணியாற்றுமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். நிலங்களில் உழுதுக் கொண்டிருந்த விவசாயிகளை சந்தித்து, சம்பா சாகுபடியின் நடப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தாய்மார்களுடன் வந்த பிள்ளைகளிடம், அவர்களின் கல்வி குறித்தும் கேட்டறிந்தார்.
தன்னிடம் வந்த மனுக்கள் குறித்து உடனுக்குடன் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து பேசினார்.
இச்சந்திப்புகளில் கழிவு நீர் அகற்றம், குப்பை அகற்றல், கொசு ஒழிப்பு நடவடிக்கை, மின் கம்ப புகார்கள், குடிநீர் வினியோகம், போன்ற உடனடி பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.