தமிழகம் உட்பட இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக நேற்று (29/04/21) மாலை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டனர். அதில் பெரும்பாலுமான நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் திமுக 160 முதல் 170 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அயலக திமுகவின் இணை செயலாளர் எம்.எம். அப்துல்லா நக்கீரனுக்கு அளித்தப் பேட்டியின் சுருக்கம்.
தேர்தலுக்கு பின்பு வந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என வந்திருக்கிறது. அதனை திமுக தரப்பில் எப்படி பார்க்கிறீர்கள்?
இதை, பிந்தைய கருத்துக் கணிப்பாக நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறோம், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும், அதிலும் அது முழுமையான வெற்றியாகத்தான் இருக்கும் என்று. 2019 தேர்தலிலும் கிட்டதட்ட 40 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துதான் திமுகவினர் பிரச்சாரத்தையே துவங்கினோம். அதே போன்று தான் தற்போதும் திமுகவின் தலைவர் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறி பிரச்சாரத்தை துவங்கினார்.
அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என கூறியது போன்றே திமுகவினரின் பிரச்சாரமும் இருந்தது. மேலும் மு.க. ஸ்டாலின் ‘இந்த வெற்றி முழுமையான வெற்றியாக இருக்க வேண்டும், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்’ என பிரச்சாரம் மேற்கொள்ளும் அனைத்து தொகுதிகளிலும் தெரிவித்தார். அதற்கு காரணம் என்.ஆர்.சி, நீட் போன்ற மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கொடுங்கோளான எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் நாடளுமன்ற கீழவையில் முழுவதும் அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். அதனால் ஏற்றுகொள்ளப்படுகிறது. அதேவேளையில், நாடாளுமன்றம் மேலவையில் அதிமுகவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது என்பதால், அனைத்து கருப்பு சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதை தான் ஸ்டாலின், பிரச்சாரத்தில் குறிப்பிட்டு தமிழகத்தில் முழுமையான வெற்றியை ஈட்டும்பட்சத்தில் மேலவையில் நாம் அதனை தடுக்க முடியும் என்றார். இதனை முன்வைத்து தான் திமுகவினரின் பிரச்சாரங்கள் இருந்தது. அதனால் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெறுவது நிச்சயம் தான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதிமுகவினர் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தாலும், அதை ஏற்றுகொள்ளமுடியாததாகவே உள்ளது. ஏனென்றால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எல்லாரும் தங்கள்மீது முழு நம்பிக்கையாக இருப்பது இயற்கை. அதனால் அவர்களது நம்பிக்கையை நாம் பாரட்டுவோம்; ஆனால், எதார்த்த சூழல் அப்படி இல்லை என்பது தான் உண்மை.
கடைசி நேரத்தில் பல சட்டங்கள் நிறைவேற்றியது, கடுமையாக உழைத்தது எல்லாம் நிச்சயமாக பலன் கொடுக்கும் என்று கூறுவது எல்லாம் ற்றுகொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால் கடந்த பத்து வருடங்களாக மக்கள் ஒரு கொடுமையான ஆட்சியை அனுபவித்து வருகிறார்கள். 100 சதவிதம் மக்கள் தெளிவாக உள்ளார்கள். மறுபடியும் அதிமுக ஆட்சி வந்தே ஆக வேண்டும் என்று கூறுவதற்கு, இந்த ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை. அதை போல் இது சுயமான ஆட்சியாக இல்லை, பாஜக’வின் மற்றொரு ஆட்சியாக தான் உள்ளது. எனவே மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் சுத்தமாக இல்லை.
வாக்கு எண்ணிக்கையானது மே 2ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் வாக்கு எண்ணிக்கை அன்று திமுகவினர் கலவரம் செய்வதற்கு சதி செய்கிறது. இதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினர் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் புகாரில் குறிப்பிட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
அதாவது 100% வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் யாரும் கலவரம் செய்ய யோசிக்கமாட்டார்கள். திமுகவினர் ஆரம்பத்தில் இருந்தே கூறியது போல் முழுமையான வெற்றியைப் பெறுவோம். அப்படி ஒரு நம்பிக்கையில் இருக்கும் நாங்கள் கலவரம் செய்ய தேவையில்லை. ஆனால் பாபு கூறியதை பார்க்கும் பொழுது எப்படி இருக்கிறது என்றால் ஒரு தெருவில் திருடன் வந்து திருடிய பின்பு ‘திருடன் திருடன்’ என அவன் வேறு ஒருவனை காண்பித்து ஓடுவான். அதை போன்று இவர்கள் கலவரத்தை உண்டாக்க திட்டங்களை தீட்டிவிட்டு முன்கூட்டியே கூறுகிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. வெற்றி பெறும் வாய்ப்பில் திமுகவினர் இருக்கிறோம். தற்போது திமுகவினர் கலவரம் செய்தால் சேதாரம் வெற்றி பெற போகும் எங்களுக்கு தான். அதிமுகவினர் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் கலவரம் செய்வார்களோ என்ற எண்ணத்தில். ஆரம்பத்தில் இருந்தே திமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை பல படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டு இருக்கிறோம். கலவரம் செய்கிற எண்ணத்தில் திமுகவினர் இருந்தால் எதற்கு பாதுகாப்பு கேட்கபோகிறோம்.