நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த தமது அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, கட்சியை வலுப்படுத்துவதற்கான பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி மன்றத்தில் சேர்வதற்காக மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான லைக்காவில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜு மகாலிங்கம் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ஒரு நிறுவனத்தின் மிக மூத்த பதவியை விட்டுவிட்டு ரஜினி மன்றத்தில் சேர்ந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேசமயம், அவருக்கு கட்சியில் உயர்பதவி கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
ரஜினி மன்றத்தின் சார்பாக மாவட்டம் தோறும் உள்ள ரசிகர்களை சந்தித்து, ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் ராஜு மகாலிங்கம். இந்நிலையில், ராஜு மகாலிங்கம் ரஜினி மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.