தெலங்கானா மாநில ஆளுநர் ஸ்ரீமதி தமிழிசை சவுந்தரராஜன் சனிக்கிழமை திருமலையில் உள்ள வெங்கடேசபெருமானை தரிசனம் செய்தார். இதன் பின் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முக்கியமான நபர்கள் காலை 10 மணிக்கு வந்து 11 மணிக்குச் செல்வது நல்ல ஏற்பாடு எனவே நிர்வாகத்தை மிகவும் பாராட்டுகிறேன். இரவு முழுதும் மக்கள் காத்திருந்து கடவுளைத் தரிசிக்கும் சூழல் மாறி விடியற் காலையிலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இறைவனும் மகிழ்ச்சியாக உள்ளார்.
எளியோரைக் காண்பது தானே வெங்கடேஸ்வர பெருமாளுக்கு மகிழ்ச்சி. அவர் எவ்வளவு தான் அலங்காரமாக இருந்தாலும் காலையில் எளிமையான தயிர் சாதத்தைத்தானே சாப்பிடுகிறார். மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்றார்.
அதே போல் நேற்று தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூக்கு வழியாகச் செயல்படும் சொட்டு மருந்தை நாம் கண்டுபிடித்துள்ளோம். இது நமக்குப் பெருமை. ஆரம்ப காலத்தில் கொரோனா தடுப்பூசியை ஆரம்பிக்கும் பொழுது பல கட்சிகள் மத்திய அரசின் மீது விமர்சனம் வைத்தனர். தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் அதற்கு நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசிதான் காரணம்” என்றார்.