மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு தமிழக உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் இரண்டு கட்டமாக நடந்து முடிந்தது. நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதனையடுத்து நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது என்று விசாரித்த போது, மூன்றாண்டுகளாக அதோ இதோ என்று இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த உள்ளாட்சித் தேர்தலின் ஒருபகுதி முதல்கட்டமா 27-ந் தேதி நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்குப் பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்று உளவுத்துறையினர் மூலம் முதல்வர் எடப்பாடி விசாரித்துள்ளார்.
பரவலாக கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாலும், அங்கங்கே போட்டி வேட்பாளர்கள் நின்றதாலும் அ.தி.மு.க.வின் வெற்றி சதவீதம் 35-ல் இருந்து 40 சதவிகிதம் வரைதான் இருக்கும் என்று எடப்பாடியிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் எல்லாம் 70, 80 சதம் வரை நாம் ஜெயிப்போம் என்று கூறியதற்கு மாறாக ரிசல்ட் வந்திருப்பதால் அப்செட்டான எடப்பாடி, அடுத்து வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் தீவிரமாக கவனம் செலுத்துங்கள் என்று கட்சிப் பிரமுகர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை 10 விழுக்காடு இடங்களில் கூட ஜெயிக்கவிடக் கூடாது என்று ஆளும்தரப்பு மும்முரம் காட்டிவந்த நிலையில், தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஆளும்கட்சி தரப்பிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்து வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடக்குமா? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.