மத்திய அரசுக்கு எதிராக நாடெங்கும் நடக்கும் போராட்டத்தால் இப்போது பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குமே மோதல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அவரது மிதவாதத் தன்மைக்கு எதிராக அத்வானி தீவிரமாக இருந்தார். அத்வானியிடம் தீவிர செயல்பாடு அதிகரிக்கும் போதெல்லாம், தனக்கும் பா.ஜ.க.வுக்கும் கெட்ட பெயரை அது ஏற்படுத்தும் என்று உணர்ந்து, வாஜ்பாய், அத்வானியை தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இழுத்து வைத்திருந்தார்.
இப்போது, பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று, தனது பிரதமர் பதவியை நீட்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அமித்ஷாவோ, நாடாளுமன்றத்தில் அதிக பலத்தோடு தாங்கள் இருக்கும் போதே தங்கள் இந்துத்துவா கோட்பாடுகள் அனைத்தையும் சட்டமாக்கி விட வேண்டும் என்று துடிக்கிறார். இந்த எண்ணத்தில்தான், தான் கொண்டு வர நினைத்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவையும் அவசரமாக நிறைவேற்றியுள்ளார் என்று கூறுகின்றனர். ஆனால் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. மோடி எதிர்பார்த்ததை விட எதிர்ப்புச் சூறாவளி நாடு முழுக்க சுழன்றடிக்க ஆரம்பித்ததும், அவர் திகைத்து போயிட்டார் என்கின்றனர். அதிலும் மாணவர்கள் கையிலெடுத்த போராட்டம் நாடு முழுவதும் பரவியதும் அவரை மிரட்டத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தலைவர் என்கிற இமேஜை உருவாக்க முனைந்த மோடிக்கு, இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் நெருக்கடியை உண்டாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துபாய் என்று பல்வேறு நாடுகளிலும் மோடியைக் கண்டித்து போராட்டங்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர்.
போதாக்குறைக்கு மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, மதச்சார்பற்ற இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் விதமாக இதுபோன்ற ஒரு சட்டம் நிறைவேறி இருப்பது வருத்தத்தைத் தருகிறது. அதேபோன்ற நடவடிக்கையை இங்கு மலேசிய அரசு எடுத்தால் என்ன நடக்கும்? இங்கு இருக்கும் இந்துக்கள் பலரும் அதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்திருக்கிறார்.
இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்த மோடி, அமித்ஷாவிடம் கோபப்பட்டிருக்கிறார். அதோடு, நாடாளுமன்றத்திலேயே குடியுரிமைப் பதிவேடு முறை அனைத்து மாநிலங்களிலும் உறுதியாகக் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா சொல்லியிருந்த நிலையிலும், இது குறித்த அறிவிப்பு குடியரசுத் தலைவர் உரையிலேயே இருக்கும் நிலையிலும், இதற்கு மாறாக மோடி, குடிமக்கள் பதிவேட்டு முறை பற்றி உறுதியாக எந்தத் திட்டமும் இல்லை. அசாமில் அதை அமல்படுத்தியதற்குக் காரணம், நீதிமன்றம் உத்தரவிட்டதால் தான் என்று, டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி அமித்ஷாவுடனான முட்டல் மோதலைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருக்கிறதாக பா.ஜ.க. வின் உள்வட்டத்தில் சொல்கின்றனர்.