குதிரை பேரத்திற்கு இடம் கொடுக்காமல் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள அரசு பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கையில், ’’கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பலரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் அக்கட்சிக்கு பெரும்பான்மைக் கிடைக்கவில்லை. 104 இடங்களுக்கு மேல் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் 37 இடங்களைப் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 78 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப்பினரும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு ஆதரவைத் தெரவித்துள்ளனர். 117 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். அவருக்கு ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்துள்ளார். அவருக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
பாஜகவும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதிக எண்ணிக்கை பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற போதிலும் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லையென்பது வெளிப்படையாகத் தெரியும் நிலையில் அப்படி வாய்ப்பளித்தால் அது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும். அப்படியான ஜனநாயகப் படுகொலை நிகழ்வதற்கு ஆளுநர் உடந்தையாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
குமாரசாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதென்று காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவைப் பாராட்டி வரவேற்கிறோம். இது கர்நாடகாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்றச் சக்திகள் ஓரணியில் திரள்வதற்குத் துவக்கமாக அமையும் என்று நம்புகிறோம். ’’ என்று தெரிவித்துள்ளார்.