லெனின் ஒரு பயங்கரவாதி, அவருடைய சிலையை நாம் எதற்காக வைத்திருக்கவேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததில் இருந்து, அங்குள்ள பல கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. சி.பி.எம். கட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நேற்று பெலோனியாவில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சிலை இடிப்பு சம்பவம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘லெனின் ஒரு அயல்நாட்டவர் மற்றும் பயங்கரவாதி. அவரது சிலையை நாம் ஏன் இங்கு வைத்திருக்கவேண்டும்? லெனின் சிலையை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் வைத்து அவர்கள் பராமரித்துக் கொள்ளட்டும்’ என தெரிவித்துள்ளார்.
சி.பி.எம். பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, ‘பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் திரிபுராவில் நடந்துகொண்டிருக்கிறது. வன்முறையைத் தவிர அவர்களுக்கு வேறு அரசியல் எதிர்காலமே கிடையாது’ என கூறியுள்ளார்.