








தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (11.05.2021) காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடைபெற்றது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகராக இருந்த கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், பின்னர் அகர வரிசைப்படி சட்டபேரவை உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
கரோனா பாதிப்பால் பங்கேற்க முடியாதவர்கள் வேறொரு நாளில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்ள உள்ளனர். இந்நிலையில், இன்று இரண்டாம் நாளாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ராதாபுரம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் அப்பாவு சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் அதிமுக, திமுக, மதிமுக, விசிக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.