பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று (16.04.2021) மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மத்திய பாஜக ஆட்சியில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அம்பேத்கரை ஒரு சாதித் தலைவராக அடையாளப்படுத்த முயற்சி நடக்கிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கரை பெருமைப்படுத்தியுள்ளது. அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர்; சாதித் தலைவர் அல்ல. அம்பேத்கர் புகழை பாஜக உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது. மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாஜகவினர் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டனர். இதனால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அரசியல் கைவிட்டுப் போகும் சூழலில், திருமாவளவன் சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளார். அந்த நோக்கத்தில்தான் அரக்கோணம் இரட்டைக் கொலைச் சம்பவத்தை அவர் கையாள்கிறார்.
திருமாவளவன் அடிப்படை அரசியலை இழந்து, சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளார். பாஜகவினர் அமைதியானவர்கள். அதனால்தான் அன்று நடந்த சம்பவத்தில் கூட அமைதியாக இருந்தார்கள். திருமாவளவன் தன் கட்சியினரைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.” இவ்வாறு கூறினார்.