கரோனா தொற்று காரணமாக .போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது. இன்று மூன்றாவது நாளாக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்தது.
அப்போது ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கலைவாணர் அரங்கம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், சட்டப்பேரவையில் பேச வேண்டும் என்று வந்தேன். நேற்று முன்தினம் ஆயிரம் விளக்கு தொகுதி பற்றி கவன ஈர்ப்பு கொடுத்திருந்தேன். நேற்று, நாளை சொல்கிறேன் என்றார் சபாநாயகர். இன்றோ அடுத்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார். அதனால் அங்கே பேச வேண்டியதை இங்கே சொல்கிறேன். அதனைக் குறிப்பு எடுத்துக்கொண்டு நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம். பாரத் மாதாவுக்கு ஜே. என்ற வார்த்தைக்கு இணங்க அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த அவையின் மூலம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தொகுதி குறித்த பிரச்சனைகளை நான் அடுத்த முறை சொல்லிக்கொள்கிறேன். வருடத்திற்கு பலாயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கி வரும் பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 5 லட்சம் போலி விவசாயிகள் சேர்த்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.