முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39வது நினைவு நாளான நேற்று (31-10-23) இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “மாநில அரசாங்கம் அதன் எல்லைகளுக்கு உட்பட்டு தான் கடன் வாங்குகிறது. அது மாநில அரசுகளின் உரிமை. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்ததை விட இப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு ஏராளமாக கடன் வாங்கியுள்ளது. மத்திய அரசுக்கு கடன் வாங்குகின்ற உரிமை உள்ளது என்றால் தமிழக அரசுக்கு கடன் வாங்கும் உரிமை இல்லையா? தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தவறான கருத்துக்களை மக்கள் நிராகரித்து விடுவார்கள்.
தமிழக ஆளுநர் மாநில அரசை சந்திக்க பயப்படுகிறார், குறை சொல்கிறார், விமர்சிக்கிறார். அவருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், தமிழக அரசு செயலாளரையோ அல்லது போலீஸ் டி.ஜி.பி.யையோ அழைத்து அவர்களிடம் அவரது கருத்துக்களை கூறலாம். அதை விட்டுவிட்டு பத்திரிகையாளர்களையும், பா.ஜ.க.வையும் நம்பி இருக்கிறார். எல்லா விதமான அடிப்படை முரண்பாடுகளுக்கும் அவர் மட்டும் தான் பொறுப்பு. தமிழக ஆளுநர் வெளியேற வேண்டியவர் அல்ல, வெளியேற்றப்பட வேண்டியவர்” என்று கூறினார்.