ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஈரோட்டில் அதிமுக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவிற்கு வாக்கு சேகரித்தார். அதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் அனைவரையும் ஒரே முகத்துடன் பார்க்கிறோம். அந்த வாக்காளர்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்துள்ளது என்பது தான் கேள்வி. நாங்கள் எங்களது ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு தேவையான திட்டங்கள், பெரும்பான்மை மக்களுக்கு தேவையான திட்டங்கள் என அனைத்தையும் கொடுத்துள்ளோம்.
தனிமனித தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய கட்சி அதிமுக தான். அதில் பெரும்பான்மை சிறுபான்மை என அனைவரும் அடக்கம். அதன் அடிப்படையில் தான் எங்கள் ஆட்சி இருந்தது. இவர்களைப் போல் வாக்காளர்களை பிரித்து, சிறுபான்மை, பெரும்பான்மை என பிரித்தாண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகளை அபகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆட்சியாளர்கள் அதை கையில் எடுத்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை அனைவரும் ஒருவரே” எனக் கூறினார்.