
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இரு முறையும், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக ஒரு முறையும் பணியாற்றியவர். வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவைப் பேணியவர். நெருங்கிய நண்பர்களில் ஒருவர். என்னுடன் அன்பாகவும், மரியாதையுடனும் பழகிய மனிதர்.
கே.என். லட்சுமணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.