சென்னை நந்தனத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த நிலையில், விருதுநகரில் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “தி.மு.க தலைவரை தரங்கெட்ட வகையில் பேசினால் எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார் என நினைத்து ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.
ஜெயலலிதா இருக்கும்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலை மட்டுமல்ல அவருடைய கார் டயரையும் நக்கிப் பிழைத்தார்கள். தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் காலை நக்கிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னைப் பற்றி பத்திரிகையில் எழுதியதால் பத்திரிகையாளரின் பல்லை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பியவர்தான் இந்த ராஜேந்திர பாலாஜி.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மூலை முடுக்கிற்கும் சென்று மக்களைச் சந்திப்பார். ஆனால், துணைக்கு ஆள் இல்லாமல் ராஜேந்திர பாலாஜி செல்லமுடியுமா?
9 ஆண்டுகாலமாக அ.தி.மு.கவினர் தமிழ்நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க தலைவர் சொன்னதில் என்ன தவறு? தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைசெல்லும் அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருப்பார்.
தரங்கெட்ட அரசியல் செய்வதை ராஜேந்திரபாலாஜி நிறுத்தவேண்டும். இல்லையெனில் அவரால் இனி விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.