இந்தியா முழுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரளா, குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 3ம் கட்டத்தில் தேர்தல் நடைபெற்றது.
கடந்த 23ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்தலுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டதால், அங்கு அனைவரும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். வாக்குப்பதிவு வரை மிக வீரியமாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேட்பாளர்கள், வாக்குப்பதிவு முடிந்தபிறகு பிரச்சார குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக எர்ணாகுளம், இடதுசாரி வேட்பாளர் ராஜூவ், தனது ஆதரவாளர்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், அவரது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர்கள் போன்ற குப்பைகளை அகற்றி, எர்ணாகுளத்தை இன்னும் சில மணி நேரங்களில் தூய்மையாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளார், இதனை பலரும் வரவேற்றுள்ளனர், பகிர்ந்துள்ளனர்.
இதேபோன்று பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அல்போன்ஸ் கன்னாந்தனம், தனது ஆதரவாளர்களுடன் குப்பைகளை தூய்மைப்படுத்தி வருகிறார். பாஜக கூட்டணி, திருவனந்தரபும் வேட்பாளர் கும்மானம் ராஜசேகரன், தனக்கு வந்த சால்வைகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை தலையணைகள் மற்றும் பைகளாக மாற்றி பிறருக்கு கொடுத்து வருகிறார். தேர்தல் முடிந்தவுடன் போஸ்டர்கள், பேனர்கள் போன்ற குப்பைகளை அப்படி அப்படியே விட்டுச்செல்லாமல், அவற்றை அகற்றி வரும் வேட்பாளர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.