தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், “அதிமுக வெற்றிக்கு பாஜக தடையாக இருந்தது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் அதிமுக வெற்றி நடைபோட்டு வருகிறது. பாஜக அதிமுகவோடு இருந்ததால் காலில் ஒரு கட்டையைக் கட்டிக் கொண்டு ரேசில் ஓடியது போன்று இருந்தது. அதிமுக வெற்றிக்கு இடையூறாக இருந்த பாஜக என்ற தடை நீக்கப்பட்டுவிட்டது.
2 ஆண்டுகள் கூட அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி அண்ணாமலை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து நம்மையும் கடித்துவிட்டார். கூட்டணியில் இருந்து கொண்டு ஜெயலலிதாவை விமர்சனம் செய்து கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறிவிட்டார். கண்டன தீர்மானம் நிறைவேற்றியும் அண்ணாமலை திருந்தாமல் அண்ணாவை விமர்சனம் செய்திருக்கிறார். அண்ணாமலைக்கு தைரியம் கொடுத்தது யார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே கண்டபடி பேசி வருகிறார். என் மண் என் மக்கள் என்பது தவறான தலைப்பு. அதனை அதிமுக ஆதரிக்கக் கூடாது. கர்நாடகாவில் காக்கி சட்டை போட்ட அண்ணாமலைக்கு இந்த மண் சொந்தமா. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை. ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், கந்துவட்டிக்காரர்கள் தான் பாஜகவில் உள்ளனர். பாஜகவினர் அண்ணாமலையின் ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. பாஜக எந்த இடத்திலும் டெபாசிட் வாங்காது” எனத் தெரிவித்துள்ளார்.