கரூர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி. இவர் அரவக்குறிச்சி அருகே லிங்கநாயக்கன்பட்டியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டியதாக அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். மேலும் அருகில் இருந்தவர்கள் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் என்றும், காவல்துறையினர் மிரட்டில் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, பிரச்சாத்தில் இருந்த எங்களை மறித் திடீரென இரண்டு பேர் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது. மந்திரி உங்களை உள்ளே விடக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார் என ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொருவர் கத்தியை எடுத்து குத்து என்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். யாருக்காவது எதாவது ஆகியிருந்தால் என்ன செய்வது. அவர்கள் குறித்து விசாரத்தபோது அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒருவர் திருமூர்த்தி, பெரியசாமி என தெரியவந்தது. மக்கள் எங்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென கத்தியை காட்டி மிரட்டியதும் மக்கள் அங்கும் இங்கும் அதிர்ச்சியில் ஓட ஆரம்பித்தனர். நாங்க ஓட்டு கேட்டு போகும் இடமெல்லாம் கத்தியோட அமைச்சர் ஆளு அனுப்பினா நாங்க எப்படி ஓட்டு கேட்க போக முடியும் என்றார்.
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், தோல்வி பயத்தில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் அடியாட்களை ஏவி விட்டு இருக்கிறார்கள். தம்பிதுரை போகும் இடமெல்லாம் மக்கள் விரட்டி அடிக்கின்றனர். என்னை மக்கள் அன்பாக வரவேற்கின்றனர். அந்த விரக்தியில் தம்பிதுரை எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டார் என கூறியுள்ளார்.