
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தின் கீழ் ஷேகான் தாலுகா உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா என்ற 3 கிராமங்களில் வசித்து வந்த மக்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் பெருமளவு தலை முடி உதிர்வு ஏற்பட்டு பலரும் வழுக்கை தலையாக மாறினர்.
ஆண், பெண் எனப் பாராமல் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உண்டாகினர். இது குறித்து தகவல் அறிந்த உயர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அந்த கிராமங்களில் உள்ள தண்ணீர் மாதிரிகள் மற்றும் கிராம மக்களின் முடி மற்றும் தோல் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். திடீரென்று, முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை தலையாக மாறுவதால் அந்த கிராமங்களை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பீதியடைந்தனர்.
கல்லூரி மாணவர்கள், இளம் பெண்கள் என 18 கிராமங்களில் உள்ள 300 நபர்கள் முடி உதிர்வு ஏற்பட்டு பாதிப்படைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முற்றிலும் வழுக்கை தலையாகிவிட்டனர். இந்த நிலையில், பாதிப்படைந்த கிராமங்களில் உள்ள தண்ணீர் மாதிரிகல் மற்றும் மக்களின் முடி மற்றும் தோல் மாதிரிகளை எடுத்துச் சென்ற அதிகாரிகள் தற்போது ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
பத்மஸ்ரீ டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் மேற்கொண்ட ஆய்வில், பொது விநியோக முறையின் (PDS) கீழ் விநியோகிக்கப்படும் கோதுமையில் அதிக அளவில் செலினியம் இருப்பதாகவும், அதே நேரத்தில் அதன் துத்தநாக உள்ளடக்கம் கணிசமாகக் குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர் பவாஸ்கர் கூறியதாவது, “பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து கோதுமை பற்றிய எங்கள் பகுப்பாய்வில், உள்ளூரில் விளையும் கோதுமை வகையை விட 600 மடங்கு அதிக செலினியம் இருப்பது தெரியவந்தது. இந்த அதிக செலினியம் உட்கொள்ளல் அலோபீசியா நோய்களுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இந்த நிலை வேகமாக வளர்ந்தது, இந்த கிராமங்களில் அறிகுறிகள் தோன்றிய மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முழுமையான வழுக்கை ஏற்படும்” என்று தெரிவித்தார்.