கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களில் வெற்றி பெற்றன.
கர்நாடகா மாநிலம், சிக்மகளூரு தொகுதியில் 5வது முறையாக தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான சி.டி.ரவி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தம்மையா என்பவர் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி 77,979 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்மையா 84,015 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி தம்மையா 5926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில் மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் போஜ் கவுடா சி.டி.ரவியை தோற்கடிக்க திட்டமிட்ட நிலையில், அதே தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர் திம்ம செட்டிக்கு ஆதரவு அளிக்காமல், காங்கிரஸ் வேட்பாளரான தம்மையாவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் தனது ஆதரவாளர்களிடம் தம்மையாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனால் ஏற்கனவே 4 முறை வென்ற சி.டி.ரவி சிக்மகளூரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.டி.தம்மையாவிடம் தோல்வி அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்த போஜ் கவுடா தனது தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன் விருந்து வைத்தும் சி.டி.ரவியின் தோல்வியை கொண்டாடினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் சி.டி.ரவியை தோற்கடிக்க காரணமாக இருந்த போஜ் கவுடாவுக்கு வாழ்த்துக்களை கூறி பால் அபிஷேகம் செய்தனர். இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.