2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்; வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் உடல்நலத்துடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். எப்போதுமே தமிழ்நாடு முற்போக்கு சமுதாயமாக இருந்து வந்துள்ளது. தொழில்துறை நலன், மக்கள் நலனில் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான மனோபாவத்தை வளர்க்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு எப்போது முன்னோடியான மாநிலமாக உள்ளது. சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது தமிழ்நாடு தான். சமூகநீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்; வெற்றி பெறும்.” எனக் கூறினார்.