ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதில் ஈபிஎஸ், முதல்வர் ஸ்டாலினை தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்.பி. கனிமொழி, “நான் எப்போதும் மரியாதையாகவே பேசுவேன். தரக்குறைவாக யாரையும் விமர்சனம் செய்யமாட்டேன். ஏனென்றால், கலைஞர் இருந்த பதவியில் சில நாட்கள் அவரும் (எடப்பாடி பழனிசாமி) ஒட்டிக்கொண்டு இருந்தார். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்; தோல்வி என்பது தெரிந்த உடன் ஒரு நடுக்கம் வந்துவிட்டது. இரண்டு பக்கமும் பிய்த்துக் கொண்டு உள்ளார்கள். இப்பொழுதே இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது. திமுகவில் இருக்கிறவர்கள் எல்லாம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். ஆனால் அடிப்படையில் அவர்கள் திமுகவின் உடன்பிறப்புகள். இந்த பதவியை இரண்டு நிமிடங்களில் தூக்கி எறிந்து விடுவார்கள். அனைத்திற்கும் ஓரளவுக்குத் தான் பொறுமையாக இருப்பார்கள்.
அமைச்சர் நேருவைப் பற்றி கலைஞர் ஒருமுறை சொன்னார். ‘அங்கே நிற்கிறான் பார் அமைதியாக. அவனுக்கு கோபம் வந்துச்சுன்னா அதுக்கப்புறம்...’ அந்த கோபத்தை கே.என்.நேரு இன்றுவரை விட்டுவிடவில்லை. பல நேரங்களில் அந்த கோபம் வைரலாக செல்கிறது. அன்பில் மகேசுக்கும் எப்படி கோபம் வரும் என்பது தெரியும். அதனால் இங்க இருக்கக்கூடியவர்கள் யாரையும் தயவு செய்து சீண்டிப் பார்க்காதீர்கள்.
முதல்வர் ஸ்டாலின் சொல்லியுள்ளார். நீங்கள் பத்திரமாக அங்கிருந்து செல்ல வேண்டும் என்று. அதனால் உங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் தர வேண்டும் என்பதால் நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு சென்றுவிடலாம் என நினைக்காதீர்கள். அவருக்கும் கட்டுப்படாத சில பேர் இருக்கக் கூடும். அதனால் நீங்கள் தயவுசெய்து உங்கள் வார்த்தைகளை எண்ணி பேசுங்கள். நாவடக்கம் தேவை. அது இல்லை என்றால் உங்களுக்கு நாவடக்கம் என்றால் என்ன என்று திமுக சொல்லும்” எனக் கூறினார்.