வடசென்னையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். தொடர்ந்து திமுக சார்பில் பொங்கல் பரிசுகளை வழங்கினார். உடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இருந்தனர்.
இதன் பின் எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் துவக்கி வைத்துள்ள சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா, மக்களின் வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. வங்கித் தேர்வினை பொங்கல் தினத்தன்று வைத்து மக்கள் கொண்டாட முடியாத அளவிற்கு செய்துள்ளார்கள். திமுக இதை கண்டித்துள்ளது. அதைத் தாண்டி முதல்வர் மத்திய அரசின் நிதித்துறை அமைச்சரிடம் பேசியுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் போன்று பல மாநிலங்களில் விவசாயத் திருவிழாக்கள் கொண்டாடக்கூடிய சூழலில் அத்தனை பேருடைய உறவினர்களையும் மதிக்காமல் அந்த தினத்தில் தேர்வு அறிவித்து நடத்தியிருப்பது நாட்டின் ஒற்றுமையை குலைக்கக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. தமிழர்களின் உணர்வுகளைத்தான் அவர்கள் எந்த காலத்திலும் புரிந்து கொள்வதே கிடையாதே. இங்கிருக்கும் ஆளுநர் உட்பட நம் உணர்வைத் தொடர்ந்து புண்படுத்தி வருகிறார்கள். தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகத்தான் கொண்டாடி வருகிறோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் படத்தை காவியில் பதிவிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கனிமொழி, “திருக்குறளை படித்தால் புரிந்து கொள்வார்கள்., அதற்கும் காவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. முதலில் படிக்கணும். இல்லையென்றால் கலைஞரின் உரை தெளிவாக இருக்கிறது. அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்” எனக் கூறினார்.