பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் கனல்கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பு "இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்" என்ற ஒன்றை கடந்த மாதத்தில் மேற்கொண்டது. அப்பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், "ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனத்திற்காக செல்கின்றனர். ஆனால் அக்கோவிலின் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது எப்பொழுது உடைக்கப் படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் பெரியார் குறித்தான அவரது இப்பேச்சு கடும் கண்டனத்திற்கு உள்ளது. இதன் பேரில் தந்தை பெரியார் திராவிட இயக்கத்தினர் அளித்த புகாரில், 'இரு பிரிவினரிடையே கலக்கத்தை தூண்டிவிடுதல், ஒற்றுமையை சீர் குலைத்தல்' போன்ற பிரிவின் கீழ் அவரின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் இருந்து வெளியேற முன்ஜாமீன் பதிவு செய்திருந்தார் கனல் கண்ணன். காவல் துறையின் விசாரணையில் கனல் கண்ணன் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவரை கைது செய்து விசாரிப்பது கட்டாயம் என கூறப்பட்டது. காவல்துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன்ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் கனல் கண்ணன் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.