ஈரோடு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு சுற்றுகளின் இறுதியில் முடிவுகள் வெளியாகி, அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடர்ந்து பின்னடைவு சந்திக்கிறார் எனத்தெரிய ஆரம்பித்ததுமே, குஷியானார்கள் ஓ.பன்னீர்செல்வம் விசுவாசிகள். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பிலோ, ஓ.பி.எஸ். அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் மகளிரணியினர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலையிட்டு, ஒப்பாரிப் போராட்டம் நடத்தினார்கள்.
ஒப்பாரியின் போது, ‘முட்டி போட்டு ஜெயிச்ச மாதிரி ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியலியே ராசா... அரசனை நம்பி புருஷன கைவிட்ட கதையா ஆகிப்போச்சே ராசா... ஈரோட்டுல தெருக்கோடியில கட்சிய நிறுத்திப்புட்டியே ராசா...’ என ஒப்பாரிப் பாடல்கள் போல பாடல்களை பாடினர். இவ்வாறு நல்லதும் கெட்டதுமாக ஓபிஎஸ் தரப்பினர் ஆங்காங்கே கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.