தமிழகத்தில் கோடை வெயிலோடு சேர்த்து நாடளுமன்ற தேர்தல் சூடு மக்களை தாக்க ஆரம்பித்துவிட்டது. இது நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளை விட மாநில கட்சிகள் வேகமாக இருக்கின்றன. திமுக, அதிமுக இரண்டுமே தங்கள் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு தற்போது பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே தேசிய அளவில் செயல்படுவதால் சற்று தாமதம் ஏற்படுகிறது. இந்த வரிசையில் கூட்டணி சேராமல், கூட்டணி அமைக்காமல் தனித்து களம் காண்கிறது மக்கள் நீதி மய்யம். தன் முதல் தேர்தலை சந்திக்க தயாராகிவரும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று 21 தொகுதிகளுக்கான அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
இன்று காலை சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை வாசித்தார். வேட்பாளர்களின் பெயர்களை வாசித்து முடித்ததும், "தற்போது 21 வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்திருக்கிறோம். மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வருகின்ற 24ஆம் தேதி அறிவிக்கிறோம். அதில் சில முக்கிய பெயர்களும் உண்டு" என்று குறிப்பிட, அனைவரும் ஆவலடைந்தனர். 'முக்கிய பெயர்கள்' என கமல் குறிப்பிட்டது தனது பெயரையும் சேர்த்துதான் என்று கட்சியினர் பேசிக்கொண்டனர். மக்கள் நீதி மய்யத்தின் ஒரே முக்கிய முகமாக கமல் இருக்கிறார். இது முதல் தேர்தல் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டு சேர்க்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. அதே நேரம், அவர் தேர்தலில் நின்றால்தான் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள் என்றொரு பார்வையும் இருக்கிறது. கமல்ஹாசன், போட்டியிடுவாரா பிரச்சாரம் செய்வாரா என்பது 24ஆம் தேதி தெரியும். அதுவரை கமல் வைத்த சஸ்பென்ஸ்தான் அந்த 'முக்கிய பெயர்கள்'.