மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிடவும் இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களை அறிவிக்கவும் கோவையில் நேற்று அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் மாபெரும் மாநாடு நடந்தது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அக்கட்சியின் கூட்டணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.கு.தமிழரசன் கலந்துகொண்டு பேசினார்.
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர் அதை வெளியிடவிருக்கும் கடைசி கட்டத்தில் நாடாளுமன்றத்தில் பேசும்பொழுது சொன்னார், 'இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களையும் சமமாக்கப் போகிறது. ஏழைகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் ஒரே வாக்குரிமை என்ற சமநிலையை உருவாக்கப்போகிறது. 21 வயது வந்த அனைவரும் நாட்டை ஆளப் போகின்றனர், வாக்களிக்கப் போகின்றனர். ஆனால், வாக்கில் மட்டுமல்லாது, ஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் எல்லா வகையிலும் சமம் என்ற நிலை வரும்போதுதான் இந்தியாவிலே முழுமையான ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது என்று நான் கருதுவேன்' என்று. ஆனால், 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று வரை அந்த நிலை வந்திருக்கிறதா? இந்த நாட்டில் ஒரு சதவிகிதம் இருப்பவர்களிடம்தான் 70 சதவிகித சொத்து இருக்கிறது. சொத்து கூட வேண்டாம். இன்றும் 22 கோடி மக்கள் கழிப்பறையில்லாமல் வாழுகிறார்கள், 3 கோடி பேர் பிளாட்ஃபார்மில் வாழுகிறார்கள், 30 கோடி பேர் தினமும் ஒரு வேளை உணவில்லாமல் இருக்கிறார்கள். மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நம் ஒவ்வொருவர் தலையிலும் ஒன்றரை லட்சம் கடனை உருவாக்கியுள்ளது. இவற்றுக்கெல்லாம் ஒரு மாற்றம் வராதா என்று ஒவ்வொருவரும் ஏங்குகிறார்கள். அந்த மாற்றத்தைத்தான் மக்கள் நீதி மய்யம் கொண்டுவருகிறது.
இன்று பிற அரசியல்வாதிகள் சொல்கிறார்கள், 'இவர் நல்ல நடிகர், காதல் இளவரசன், உலகமகா நடிகர், ஆனால் அரசியலில் இவருக்கு என்ன தெரியும்? இவர் என்ன செய்வார்?' என்கிறார்கள். ஆம், இவருக்குத் தெரியாது... இவருக்குத் தெரியாது, ஊழல் அரசியல் தெரியாது, சாதி அரசியல் தெரியாது, மத அரசியல் தெரியாது, பதவி அரசியல் தெரியாது, ஆதிக்க அரசியல் தெரியாது, அடாவடி அரசியல் தெரியாது... இவருக்குத் தெரிந்தது சேவை அரசியல். அதனால்தான் அவரது வேட்பாளர் பட்டியலில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், IPS அதிகாரிகள், பட்டதாரிகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் அரசியலால் சம்பாரித்தவர்கள் அல்ல, அரசியலுக்கு சம்பாரிக்க வந்தவர்கள் அல்ல. கமல்ஹாசன் சினிமாவில் மாபெரும் சாதனைகளை படைத்தவர். அரசியலிலும் அவர் மாற்றத்தை உண்டாக்குவார். ஊழல் அரசியல், சாதி அரசியல், மத அரசியல், பதவி அரசியல், ஆதிக்க அரசியல், அடாவடி அரசியல் ஆகியவற்றுக்கு பதில் அளிப்பார். அவர் இனி உலகநாயகன் அல்ல, மக்கள் நாயகன் என்ற அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்குவார்கள்."