சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21-09-24) நடைபெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின், 2வது பொதுக்குழு கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், மாநில செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழுவில் கூட்டத்தில், கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.
அதில் அவர், “மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தான திட்டம். அது தவறு என்பது உலக அரசியலுக்கு தெரியும். தோல்வி என்பது நிரந்தமானது அல்ல, பிரதமர் பதவி என்பதும் நிரந்தரமானது அல்ல. ஆட்சி பீடத்தில் அமர்வர்களுக்கு கூட யோசிக்கும் நேரம் கொடுக்க வேண்டும். அடுத்த ஐந்து வருடத்தில், இதை செய்தால் தான் அங்கு வழிவிடுவார்கள் என்று அவர்களுக்கு பயம் வேண்டும். இதை அனைத்து ஆட்சியாளர்களுக்கும் சொல்கிறேன். இது யாருக்கும் விடும் சவால் அல்ல, அரசியல் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றால் இந்த ஆட்சி பீடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால், வரி ஒழுங்காக கட்டுகிறோம். மற்ற மாநிலங்களில் குறைவாக தான் கொடுக்கிறார்கள். உத்தரப் பிரதேசம் போன்ற மற்ற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும், பகிர்ந்து கொடுக்க தான் சொல்கிறோம். இந்த நாட்டை வழி நடத்திக் கொண்டிருப்பது வரிப்பணம் தான். அதுவும் நாங்கள் கொடுக்கம் பணம். அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வந்து முதல்வராக அல்லது இந்தியாவின் பிரதமராகவோ ஆகியிருக்கிறார்கள். ஆனால், ஒரு தமிழன் பிரதமராக முடியுமா?. அதற்கு நம் நாட்டை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது நமக்கோ, எனக்கோ அல்ல. நாளைக்காக: விதை போடுவேன்; வேறொருவர் சாப்பிடுவார்” என்று பேசினார்.