Skip to main content

மன்மோகன்சிங் கேள்விக்கு பதில் தெரிவிக்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்ட பாஜக... கே.எஸ்.அழகிரி பேட்டி 

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
ks alagiri

 

சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லடாக் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தாக்கியதில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களுக்கு இதய அஞ்சலி  நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்துகொண்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக் பள்ளத்தாக்கில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதய அஞ்சலி செலுத்தப்படுகிறது.  

அதேபோல தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.  சீனர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு நாள் யுத்தத்தில் உலகம் முழுவதும் சீனர்களுக்கு தவறான பெயர் பரவிவிட்டது. இதனால் இந்தியா முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி உள்ளது. காந்தி அந்நிய பொருட்களை புறக்கணியுங்கள் எனக்கூறி ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

அதைப்போல சீன பொருட்களை வாங்கக்கூடாது என முடிவு செய்து  இந்தியா முழுவதும் மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். இந்திய ராணுவம் வலிமையானது, பாகிஸ்தான் யுத்தத்தின்போது இரண்டு முனைகளில் போர் புரிந்த பலமான ராணுவம் கராச்சி வரை சென்று தாக்குதல் நடத்தி அந்த பகுதியை மீண்டும் பாகிஸ்தானுக்கு அளித்த வரலாறு உண்டு. இதனை 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரத பிரதமராக இருந்த இந்திராகாந்தி அதனை செய்தார். 

நமக்கும் சீனர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லையென்றால், ஏன் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதை பிரதமர்  விளக்க வேண்டும்.  கடந்த 2010 முதல் 2013 வரை 13 முறை அத்துமீறி உள்ளதாக நமது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு உண்டான பதிலை தெரிவிக்க முடியாமல் பாஜக ஓடி ஒளிந்து காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறுகளை பரப்புகிறது.

சாத்தான்குளம் சம்பவம் மிகவும் மோசமானது, கண்டனத்திற்குறியது. இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணையும் வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக கூறினார்.

 

சார்ந்த செய்திகள்