ஜூன் 29 அன்று மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும், முற்றிலும் முடங்கிப்போயிருக்கிற இந்த சூழ்நிலையிலும் மத்திய அரசு மனிதாபிமானமற்ற முறையில் பெட்ரோலியம் பொருட்களின் மீது தொடர்ந்து கலால் வரியை கடந்த மே வரை பனிரெண்டு முறை உயர்த்தியிருக்கிறது. இந்நிலையில் ஜூன் மாதத்தில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்றிவருகிறது. வரலாற்றில் இல்லாத வகையில் தலைநகர் டெல்லியில் டீசல் விலை, பெட்ரோல் விலையை விட அதிகரித்திருப்பது பிரதமர் மோடியின் சாதனையாக எடுத்துக்கொள்ளலாம்.
கடந்த மே 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 9.20 ஆகவும், டீசலில் ரூபாய் 3.46 ஆகவும் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீது கூடுதலாக கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூபாய் 23.78 ஆகவும், டீசலுக்கு ரூபாய் 28.37 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி பார்க்கிறபோது கலால் வரி பெட்ரோல் மீது 258 சதவீதமும், டீசல் மீது 820 சதவீதமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கலால் வரிவிதிப்பின் காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் ரூபாய் 17 லட்சத்து 80 ஆயிரத்து 56 கோடி வருமானத்தை மத்திய அரசு பெற்றிருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்பிக்கொண்ட பா.ஜ.க. ஆட்சியினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை மக்கள் விரோத நடவடிக்கையாக கருதி நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியதை எதிர்த்து வருகிற ஜூன் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேனர் மற்றும் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்ப வேண்டும். மக்களின் பாதிப்பை உணர்த்தும் வகையில் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்பவேண்டும்.
பெட்ரோலியம் பொருட்களின் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புகளை பிரதிபலிக்கின்ற வகையில், பொது ஊரடங்குக்கு கட்டுப்பட்டு, சமூக விலகலை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.