பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்ற விடாமல் செய்வதே இலக்கு என காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து யார்யார் எந்தெந்தத் தொகுதிகளில் வெற்றி என்ற தகவலும் வெளியாகும். இன்று காலை தொடங்கி முன்னிலையில் இருந்த பா.ஜ.க. தற்போதுவரை 82 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. மீதமிருக்கும் 22 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் கூட ஆட்சியமைக்கப் போதுமான 113 தொகுதிகளைப் பெறவில்லை.
அதேசமயம், 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ், 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதனை, அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உறுதிசெய்துள்ளார்.
இந்நிலையில், ம.ஜ.த. கட்சியின் தலைவர் டேனிஸ் அலி பேசுகையில், பா.ஜ.க. அதிகாரத்தைப் பெறாமல் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். அதனால், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கோரிக்கையை ஏற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.