அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்கு சென்றதோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் தந்த 19 எம்.எல்.ஏக்களில் 18 எம்.எல்.ஏக்களின் பதவியை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால்.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்புகள் தந்ததால் மூன்றாவது நீதிபதி முன்பு வழக்கு போனது. நீதிபதி சத்தியநாராயணா விசாரித்துவிட்டு இன்று அக்டோபர் 25ந்தேதி காலை வழங்கிய தீர்ப்பில், சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.
இதனால் 18 எம்.எல்.ஏக்களின் தகுதி பதவி நீக்கம் உறுதியானது, எம்.எல்.ஏ பதவி பறிபோனது. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த 18 தொகுதிகளில் உள்ள அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் - தனி என 3 தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தால் பதவி பறிபோய்வுள்ளதால் இந்த தொகுதிகள் காலியாகவுள்ளன.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஜெயந்திபத்மநாபன் வீடு, உமராபாத் அருகேயுள்ள பன்னிக்குட்டை என்கிற கிராமத்தில் உள்ளது. அந்த கிராமத்துக்கு சென்ற அதிமுகவினர் சிலர், அங்குள்ள பெண்களை திரட்டி எம்.எல்.ஏவாக இருந்த ஜெயந்தி வீட்டின் மீது கற்களை எரிந்தனர்.
இதனால் வீட்டில் இருந்த ஜெயந்தியும், அவரது உறவினர்களும், கற்களை வீசிய அதிமுகவினருடன் சண்டையிட்டனர். அதிமுகவினர் சிலர் ஜெயந்தி வீட்டுக்குள் புகுந்தனர். அதில் இருவரை பிடித்து வைத்துக்கொண்டு போலிஸ்க்கு தகவல் கூறினர்.
அங்கு வந்த ஆம்பூர் டி.எஸ்.பி தலைமையில் வந்த 30 போலிஸார் எம்.எல்.ஏ உறவினர்கள், அவரது கார் டிரைவர் உட்பட 4 பேரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். எம்.எல்.ஏவாக இருந்த ஜெயந்தி ஏன், எதுக்கு எனக்கேள்வி எழுப்பியும் டி.எஸ்.பி சாந்தலிங்கம் பதில் கூறவில்லை.
அதேபோல், ஜெயந்தி வீட்டுக்குள் புகுந்த 2 பேர், கற்களை எரிந்த 2 பேர் என 4 பேரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இப்படி தப்பு செய்யாதவர்களை அராஜகமாக போலிஸ் கைது செய்வதற்கு காரணம், முதல்வர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் என புகார் வாசிக்கிறார்கள் ஜெயந்தி தரப்பினர்.