ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அதன் கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் அதிமுகவும் தங்களது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோட்டில் திமுக கோமாளித்தனமான செயலை அரங்கேற்றி வருகிறது. ஆனால் ஒட்டகத்தின் மீது அமர்ந்து வாக்கு கேட்டது தவறு. அவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களை தடுப்பதற்காக திமுகவினர் ஆங்காங்கே பந்தல் அமைத்து அடைத்து வைத்து அவர்களுக்கு 500 ரூபாய் பணமும், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களும் கொடுக்கின்றனர்.
அதிலும் சைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் காய்கறிகள், அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் கறி, மீன், முட்டை என வேட்பாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இது ஜனநாயகத்தின் அத்துமீறல். என்னதான் ஒட்டகத்தில் போனாலும் கறி, மீன் கொடுத்தாலும் கடையில் டீ போட்டாலும் சரி இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்து திமுகவிற்கு மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள். இந்த மலிவான செயல் திருமங்கலம் ஃபார்மலாவை மிஞ்சிய புது ஃபார்முலா. இத்தனை நாளாக ஏன் முதல்வர் ஸ்டாலின் சேலம் மணடல அளவிலான கள ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்களை அழைத்து கூட்டம் நடத்துகிறார்.
ஏனென்றால் இந்த நான்கு மாவட்டமும் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பக்கத்தில் இருக்கிறது. அதனால் இந்த மாவட்டத்தின் வழியாக எங்கள் கட்சியினர் பணம் பட்டுவாட செய்வார்கள், அதனை நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என முன்கூட்டியே சொல்லுவதற்காகத்தான் இந்த கள ஆய்வை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்ற முடியாது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுக்கு சந்தி சிரிக்கிறது. ஒரே நாளில் ஒன்பது கொலை. கொலை, கொள்ளைகளின் மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. இதையெல்லாம் தடுக்காமல், கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து போலியான வெற்றியை திமுக வாங்க நினைக்கிறது. ஆனால் அது மக்கள் மத்தியில் ஒருபோதும் நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.