ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக அதிமுக தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகாரளித்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மார்ச் மாதத்தில் ஒரு விடியல் நிகழும் அதன் பின் ஓபிஎஸ் தலைமையில் கட்சி மாறும் என ஓபிஎஸ் தரப்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார்கள். சேரக்கூடாதவர்கள் பக்கம் சேர்ந்தால் அவர்களுக்கு அடிக்கும் காற்று இவர்களுக்கும் அடிக்கும் என சொல்லுவார்கள். அவர் விடியல் என்றால் திமுக பக்கம் போவதைப் பற்றி பேசுகிறார்கள். அவர் ஆட்டக்களத்தில் இல்லை. நாக் அவுட் ஆனவரைப் பற்றி பேசாதீர்கள்.
சென்னை போக்குவரத்து காவல்துறை ஒரே மாதத்தில் 3.5 கோடி ரூபாய் மதுக் குடிப்போரிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளார்கள் என சொல்கிறார்கள். அதிகமாக மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ். குறைவாக மது விற்றவர்களுக்கு சார்ஜ் மெமோ. இது தான் அந்த அரசின் நிலைப்பாடு.
எங்களைப் பொறுத்தவரை பணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியின் மீது நம்பிக்கை உண்டு. திமுகவின் அதிருப்தி எங்களுக்கு வாக்குகளாக மாறுகிறது. அண்ணாமலை தோழமைக் கட்சிகள் என்ற முறையில் அவர் பிரச்சாரம் செய்துள்ளார். எங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்” எனக் கூறினார்.