அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசும்போது, “திமுக கூட்டணி பலத்தால் ஆட்சிக்கு வந்த திமுக தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்கும் திறன் படைத்த கட்சி என்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா? அவர்கள் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாது. அதிமுக தொண்டர்கள் தற்போது உற்சாகமாக உள்ளனர். காரணம் பாஜக நம்மை விட்டு விலகி போய் விட்டதுதான். காரணம் யாரோ செய்த தவறுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தோம். இப்போது அந்த நிலை இல்லை.
நீட் தேர்வு கொண்டு வந்ததற்கும் திமுகவிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் அமைச்சர் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் பேசுகிறார்கள். அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வந்ததாக பேசுகிறார்கள். 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி காங்கிரசுடன் திமுக கூட்டணியில் இருந்தது. மத்திய அரசின் ஆட்சியிலும் பங்கெடுத்துக் கொண்டது. அப்போது இந்த நீட் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகப் பதவியில் இருந்தவர் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன். நீட்டை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட சுமார் 80 பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2013ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு அரசாணையாக வெளியிட்டது. அதே ஆண்டு ஜூலை 18 அன்று நீட் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அதை எதிர்த்து அக்டோபர் 23ஆம் தேதி திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. இதன்பிறகு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் நீட் செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப் பெற்றதோடு மத்திய அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2016 -17 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற அவசர சட்டம் கொண்டு வந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுதான் நீட்டை கொண்டு வந்தது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. திமுக நினைத்திருந்தால் அப்போதே நீட் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வேண்டியதுதானே” என பேசினார்.