நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பா.ஜ.க கூட்டணியில் த.மா.கா, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் மத்திய அமைச்சர்களை நேற்று நள்ளிரவில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை அடுத்து, பா.ஜ.க - அ.ம.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டி.டி.வி.தினகரன், “வரவிருக்கிற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். தொகுதிகள் இறுதியானதும் தெரிவிக்கிறேன். குக்கர் சின்னம் வேண்டுமென உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.
அமமுக வளர்ந்து வரக்கூடிய கட்சி. நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தான் விரும்புகிறார்கள். பா.ஜ.க கூட்டணியில் நான் எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை. எந்த நிர்பந்தமும் எனக்கு கிடையாது. குறிப்பிட்ட சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற எந்த நிபந்தனையும் கூட்டணியில் விதிக்கவில்லை. அமமுக போட்டியிட சின்னம் தொடர்பாக எந்த நிர்பந்தமும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை. மீண்டும் மோடி பிரதமரானால், தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை. ” என்று கூறினார்.