முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிறுவ நாங்கள் பாடுபடுவோம் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர். தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவரது வீட்டில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக சிறப்பாகச் செயல்பட முடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் மாபெரும் கூட்டணி அமைத்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் எண்ணத்தை அவரது நினைவு நாளில் செயல்படுத்துவதற்காக உறுதி பூண்டுள்ளோம்.
விரைவில் ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிறுவ பாடுபடுவோம் என்று ஜெயலலிதாவின் நினைவு நாளில் நாங்கள் உறுதி ஏற்கிறோம்” என்றார்.