ஜெ.மரணம் தொடர்பான அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கைகள் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் இதுகுறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''24 மணி நேரம் கழித்து டாக்டர்கள் எல்லாம் பார்த்த பின்னர்தான் ஜெயலலிதாவின் மரணத்தை இரவு டிக்லர் செய்தார்கள். இதுதான் இயற்கையிலேயே நடந்தது. கார்டியாக் அரெஸ்ட் நிகழ்ந்ததையே மரணம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆணையம் சொல்கிறது என்றால் ஒரு நீதியரசரை நாம் குறை சொல்லக்கூடாது. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர். ஆனால் அவருடைய அறிக்கை ஒரு அரசியல்வாதி எழுதியதைப் போன்று இருந்தது.வருத்தமாக இருக்கிறது.
ஒரு பெரிய தலைவருடைய மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என ஒரு பொய்யான பிரச்சாரத்தை திமுக தொடங்கியது உங்களுக்கு தெரியும். அதை ஓபிஎஸ் கையில் எடுத்தார். அதைத் தொடர்ந்து ஓபிஎஸ்சும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு அக்ரிமெண்ட்க்காக அந்த ஆணையத்தை வைத்தார்கள். மக்களின் வரிப்பணம் வீணானதாக அன்றிலிருந்து நான் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். ஜெயலலிதாவின் மரணம் என்பது இயற்கையானது. இதற்கு எத்தனை அறிக்கை கொடுத்தாலும் உண்மை அதுதான். ஒரு வேலை நீதிமன்றத்திற்கு சென்றால் ஆணையத்தின் அறிக்கையே நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகலாம்.
ட்ரீட்மென்ட் என்பது அந்த காலகட்டத்தில் அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை கொடுப்பார்கள். ஆஞ்சியோ பண்ண ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவரது உடல்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கிறது. இது மருத்துவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. ஜெயலலிதா இருந்த அறையில் அவருக்கு கார்டியாடிக் அரெஸ்ட் ஆனதும் மருத்துவர்கள் வந்து ஷாக் ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அப்பொழுது எக்மோ பொருத்தும் போது ரத்தம் வந்திருக்கிறது. நான் அங்கு சென்று பார்க்கவில்லை. ஓபன் ஹார்ட் சர்ஜரி எல்லாம் அங்கு பண்ணல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொல்வார்கள். அதெல்லாம் ஆபரேஷன் தியேட்டரில் தானே பண்ணுவார்கள். டாக்டர்களெல்லாம் இன்னொருத்தர் கூட சேர்ந்து கொண்டு சதி செய்வார்களா?''என்றார்.