கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தைப் பார்க்கும் போது இந்த தேர்தலின் பிரச்சாரம் கொஞ்சம் மந்தமாக இருப்பதாக மக்களும் , அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர் .தேர்தல் களத்தில் கட்சி தலைவர்களின் பேச்சும் , அவர்களது நகைச்சுவைகளும் , அவர்களது அடுக்கு மொழி பேச்சுகளும் மக்களை கவர்ந்து இழுத்து அவர்களை கவனிக்கச் செய்தது . இந்த தேர்தலில் மக்களை ஈர்க்கும் பிரச்சாரங்கள் கொஞ்சம் குறைவாக உள்ளதாகவே இருக்கிறது என்று வாக்காளர்களும் கட்சி தொண்டர்களும் எண்ணுகின்றனர் . இந்த வகையில் டிடிவி தினகரன் ஒரு புது ஸ்டைலை உருவாக்கி கொண்டிருக்கிறார் .

அது என்ன என்று பார்த்தால் அவர் எங்கு பிரச்சாரத்துக்குச் சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை தியாகி, ஓ.பன்னீர்செல்வத்தை மிஸ்டர் தர்மயுத்தம், பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பயில்வான் என்று பட்டப்பெயர் வைத்தே அழைக்கிறார். இந்த பிரச்சார ஸ்டைல் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது . இதில் பிரச்சாரத்துக்கு நடுவே இந்தப் பட்டப்பெயர்களை வைத்து அழைக்கும் போது கூட்டத்தில் நிற்பவர்கள் சிரித்துவிடுவதாகக் கூறுகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். அதுவும் டிடிவி பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஓபிஎஸ்.ஸை மிஸ்டர் தர்மயுத்தம் என்று அழைக்கும்போது மட்டும் கூட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மந்திரவாதி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை சந்திரமுகி என்றும் அழைக்கிறார் டிடிவி. தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பயில்வான் என்றே பட்டப்பெயர் வைத்திருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணியை கிண்டலாக மெகா கூட்டணி என்றும் அதிமுகவை எடப்பாடி அண்ட் கம்பெனி என்றும் அழைத்து வருகிறார். டிடிவி தினகரனுக்கு மத்திய , மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையும் விதித்துள்ள விதி முறைகள் இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் துணிச்சலாக எல்லோரையும் பட்டப்பெயர் வைத்து பிரச்சாரம் செய்வது கட்சித் தொண்டர்களை உற்சாகமாக இருக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள் .