அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறையைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் சமூக சீர்திருத்தப் பிரச்சாரத்தை நடத்துவதகு தமிழக அரசு முன்வர வேண்டுமென்றார் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி. புதுக்கோட்டையில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
’’காவேரி படுகை அமைந்துள்ள 5 மாவட்டங்களை உள்ளடக்கி ஹைட்ரோகார்பன் மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குறியது. விவசாயத்தை, சுற்றுச்சூழலை, நீராதாரத்தைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் இத்தகை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து வாலிபர், மாணவர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் வருகின்ற ஏப்ரல் 1 முதல் 4-ஆம் தேதிவரை தீவிரப் பிரச்சாரமும், 5ஆம் தேதிமுதல் தொடர் ரயில் மறியல் போராட்டமும் நடத்துகிறது. இந்தப் போராட்டத்தில் மாதர் சங்கமும் இணைந்துகொள்கிறது.
உச்சநீதிமன்றத் இறுதியான தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சம் இழைத்துவருகிறது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
பெண்கள் மீதான வன்முறை
நிர்பயா கொலைக்குப் பிறகு பெண்ணை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வது குற்றப்பிரிவாக சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக்தில் காதலிக்க மறுத்தால் வெட்டிக்கொலை, குத்திக்கொலை, சமீபத்தில் மதுரையில் கொளுத்திக்கொலை என்கிற அளவுக்கு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இப்பொழுதுதான் மாநில மகளிர் ஆணையத் தலைவராக கண்ணகி பாக்கியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜனநாயக மாதர்சங்கம் மற்றும் என்ஜிஓக்களை இணைத்துக்கொண்டு மாவட்ட அளவில் ஒரு சமூக சீர்திருத்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஆண், பெண் சமம் குறித்து பள்ளிகளில், பொது இடங்களில், பாடப்புத்தகங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சாதி ஆணவக்கொலையே நடக்கவில்லை என ஆட்சியாளர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதே நேரத்தில், சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் ஆணவக் கொலைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசியுள்ளார். இது வரவேற்கத் தக்கது. சாதி, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. அத்திக்கடவு-அவினாசி திட்டங்கள் ஒவ்வொரு வருடமும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். அவர்களுக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. குரங்கணியில் மலையேற்றத்திற்கு வனத்துறை எப்படி அனுமதி வழங்கியது. அல்லது வனத்துறைக்கு தெரியாமல் இது நடந்தது என்றால் இந்த வனப்பகுதி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?
அமைச்சருக்கு கண்டனம்.
ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் ரீதியாக ஒரு பெண் நிருபர் கேள்வி கேட்டதற்கு நீங்க அழகா இருக்கீங்க. உங்க கண்ணாடி பிரேம் அழகா இருக்கு என்று மிக மோசமான முறையில் பேசி இருக்கிறார். பத்திரிக்கை நிருபர். அவர் ஒரு உழைக்கும் பெண். கேள்வி கேட்பது அவரது கடமை. பதில் இருந்தால் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவரே சொன்னதைப் போல சீனியர்கள் சொல்வார்கள் என ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஆணாக இருந்தால் இப்படி கேட்டு இருப்பாரா? இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்றுகூடத் தெரியாதவர்தான் அமைச்சராக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரத்தில் நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இது பெண்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர வகுப்பினரின் குடியிருப்புப் பகுதிகளையே குறிவைத்து இது நடக்கிறது. காவல்துறையினர் இரவு ரோந்துப்பணியினை அதிகப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான பேருந்து நிறுத்துமிடங்களில் நிழல்குடை அமைக்க வேண்டும். குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக கவுண்டர் பெட்டிசன் போடும் கலையை புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை பெற்றிருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை இல்லாத நிலையில் கடும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மாற்றுவேலை இல்லாத நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு உலோகத் தொழிற்சாலை அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு உ.வாசுகி தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.