தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இறங்கியுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கியது. மேலும், அதிமுக- பா.ம.க.வுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த நிலையில், கூட்டணியில் உள்ள பா.ஜ.க., த.மா.கா., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி. உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தே.மு.தி.க. தரப்பு பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளை விட அதிக தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா சீட்டை அ.தி.மு.க. தரப்பிடம் கேட்டு வருவதால் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. இதில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளித்தார். இருப்பினும், அந்த மனுவில் எந்த தொகுதியில் போட்டி என்பது குறிப்பிடவில்லை.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விஜயபிரபாகரன், "எங்கு போட்டியிட்டாலும் தே.மு.தி.க. தொண்டர்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள். தே.மு.தி.க. தொண்டர்கள் மீது நம்பிக்கை உள்ளது" என்றார்.
இதனிடையே, இன்று (04/03/2021) காலையில் விருப்ப மனு அளித்திருந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் போட்டியிடும் தொகுதியைக் குறிப்பிடவில்லை.