Skip to main content

'இதையெல்லாம் சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'- அமைச்சர் சிவசங்கர் பதிலடி

Published on 18/08/2024 | Edited on 18/08/2024

 

 'It was Palaniswami's lips that said all this' - Minister Sivashankar retorted


தஞ்சாவூரில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணர வேண்டும். 40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'நீட் தேர்வு தோல்வியால் தஞ்சாவூரில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் சவடால் விட்டிருக்கிறார். ’’உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை முதல்வர் உணரவேண்டும்’’ என சொல்லியிருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு 13 அப்பாவிகளை துள்ளத் துடிக்க கொன்று ரத்தகறை படிந்த கைகளில்தான் இந்த ட்விட்டை போட்டிருக்கிறார் பழனிசாமி. ‘’நீட் தேர்வினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தவறான பொய்யை மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்’’ என ஆட்சியில் இருந்த போது சொன்னவர்தான் பழனிசாமி.

அப்படி பழனிசாமி பேசியே அனிதா (2017), பிரதீபா (2018), சுபஸ்ரீ (2018), ஏஞ்சலின் (2018), வைசியஸ்ரீ (2019), ரிதுஸ்ரீ (2019), மோனிஷா (2019), கீர்த்தனா (2019), ஹரிஷ்மா (2020), ஜோதி ஸ்ரீதுர்கா (2020), ஆதித்யா (2020), மோதிலால் (2020), விக்னேஷ் (2020), சுபஸ்ரீ (2020) என 14 மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாகி, ரத்தக் கறையை உடல் முழுவதும் பூசிக் கொண்டவர்தான் பழனிசாமி.

 'It was Palaniswami's lips that said all this' - Minister Sivashankar retorted

’’நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே. இப்போது நீட் எதிர்ப்பு போராளி போர்வை போர்த்தி கொண்டு வருவதற்கு வெட்கப்பட வேண்டும். ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்துவிட்டு, இன்று மாற்றி பேசி வாயை வாடகைக்கு விட்டிருக்கிறாரா பழனிசாமி? ’’எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்?’’ என இப்போது சொல்லும் பழனிசாமி, எத்தனை மாணவர்களின் சாவுக்கு காரணமாக இருந்தார்? என்பதை உணர வேண்டும்.

மருத்துவத் துறையை கவனித்து வந்த இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வர 2019-ல் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது மோடி அரசு. இந்த தேசிய மருத்துவ ஆணையம் மூலம்தான் நீட் தகுதி தேர்வும், மருத்துவ மேற்படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வும் நடத்தப்படும். இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேறியது.

அதன்பிறகு மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், ‘’இந்த மசோதா நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு பலம் சேர்ப்பதால் ஆதரிக்க முடியாது’’ என்று சொன்னார். மசோதவை எதிர்த்த அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்? மசோதவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதாவது மசோதா நிறைவேற மறைமுகமாக அதிமுக ஆதரவு அளித்தது. அன்றைக்கு தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அப்படியோரு நாடகத்தை நடத்தினார்கள். இப்படிதான் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும் அதை மாநிலங்களவையில் எதிர்த்த அதிமுக, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் முத்தலாக் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.  

’’தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது’’ என்று சொல்லி மசோதாவை இரண்டு அவையிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. ஆனால், வாக்களிக்காத தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக நீட் தேர்வை பற்றி எல்லாம் பேசாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளுமாறு பாதம்தாங்கி பழனிசாமியை வலியுறுத்துகிறோம்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்