தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. அதே சமயம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இதனையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து அக்டோபர் 3 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கூட்டணி முறிவு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று மாலை சந்தித்து பேசும் அண்ணாமலை, நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளையும் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளதால் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.