ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, ''அந்த பையன் சின்ன வயசு. எல்லோரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர். எங்க போனாலும் பிரச்சனை என்றால் நிதானமாகக் கேட்டு அங்கே திண்ணையில் உட்கார்ந்து பிரச்சனை முடியும் வரை வெளியே வருவதில்லை. அப்படி இருந்திருக்கிற ஒரு எம்எல்ஏ திடீரென்று மறைந்துவிட்டார். முதல் நாள் நானும் இளங்கோவனும் பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்த நாள் ஈரோடு போக வேண்டும் என்று சொல்கிறார். ஈரோடு வரும்பொழுது மதியம் ஒரு மணிக்கு இப்படி ஆகிவிட்டது என்று திடீரென்று தகவல் வருகிறது. அதன் பிறகு முதல்வரிடம் சொன்னேன். முதல்வர் வந்து பார்த்துவிட்டு பிறகு சென்னை சென்றவுடன் காலையில் என்னை தொடர்பு கொண்டு 'சின்ன வயசிலேயே அந்த பையன் இறந்துவிட்டார். நிறையத் திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார். வருகின்ற பொழுதெல்லாம் பேசியிருக்கிறார். இப்படி இறந்து விட்டாரே. அவருடைய நினைவாக நாம் ஏதாவது ஈரோட்டில் செய்ய வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது எங்களுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது, அவர்கள் குடியிருந்த வீதிக்கு பக்கத்து வீதிக்கு பெரியார் பெயர் இருந்தது. இவர்கள் இருந்து வந்த வீதி கச்சேரி வீதி என்று இருந்தது. அதை தெரிவித்த உடன் முதல்வர் அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசி கார்ப்பரேஷனுக்கு சொல்லி உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சேரி வீதி என்பதை எடுத்து விட்டு திருமகன் ஈவேரா வீதி என்று அறிவித்தார்கள்.
மிகப்பெரிய சோகம் என்னவென்றால் நான்காம் தேதி அவர் இறக்கிறார். 18 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கிறார்கள். வெறும் 14 நாள். அந்த குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். தந்தை, தாயை யோசித்துப் பாருங்கள். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் அவர் அவர்களின் நிலை எப்படி இருக்கும். அதன் பிறகு தான் முதல்வர் இளங்கோவை நீங்களே நில்லுங்கள் என்று சொன்னார். இளங்கோ சொன்னார், 'அந்த ஊருக்கு வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் 14 நாட்களில் நான் எப்படி தேர்தல் போட்டியிடுவது' என்று வேதனையைத் தெரிவித்தார். அதற்கு பின்னால் அவர் சமாதானப்படுத்தப்பட்டு காங்கிரஸ் கட்சியில் பேசி தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் போட்டியிட ஒப்புக்கொண்டார். அவர் நேர்மையானவர் எதையும் எதார்த்தமாக பேசக்கூடியவர்'' என்றார்.