கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் கடலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கோ.ஐயப்பன். இவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் தமக்கு சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தி.மு.க.வில் இருந்து வெளியேறி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அமைச்சர் எம்.சி.சம்பத்திற்காக தீவிரமாக தேர்தல் வேலை செய்தார். அதையடுத்து எம்.சி.சம்பத்தின் சிபாரிசின் பேரில் அ.தி.மு.கவில் மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், 2016 தேர்தலில் எம்.சி.சம்பத்தே மீண்டும் போட்டியிட்டதால் அதிருப்தியில் இருந்தார். அதன் பின்னர் சம்பத்தோடு மோதல் போக்கில் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளராக ஐயப்பன் இயங்கி வந்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பிற்கு பிறகு கட்சியில் தனக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க.விற்கு கொடுக்கப்பட்டதையடுத்து பாமக வேட்பாளர் கோவிந்தசாமி, ஐயப்பனிடம் நேரில் சென்று தமக்கு ஆதரவாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஐயப்பனின் வருகையை அமைச்சர் எம்.சி.சம்பத் விரும்பவில்லை. மேலும் வேட்பாளர் கோவிந்தசாமியும் ஐயப்பனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என நினைத்தார். இந்நிலையில் தேர்தல் பணியாற்ற தனக்கு ஆர்வம் இருந்தாலும் அமைச்சரின் கெடுபிடியால் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு பணியாற்ற முடியவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தார் ஐயப்பன். வருகிற 11-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு வரும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில் சேர உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வருமானவரி துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் ஐயப்பன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அவரது ஆதரவாளர் பிரகாஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து ஐயப்பன், தான் கட்சி மாறப் போவது அறிந்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே சிலரின் தூண்டுதலால் இந்த சோதனை நடைபெற்றதாகவும் சோதனையில் எதையும் அதிகாரிகள் கைபற்றவில்லை என்றும் தன்னுடைய அரசியல் எதிரிகள் தன்னை களங்கப்படுத்த நினைப்பதாகவும் ஐயப்பன் கூறியுள்ளார்.