Skip to main content

ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது: விஜயகாந்த்

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
dmdmk

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

’’தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய விவசாயம் இன்று பெரும் பின்னடைவில் உள்ளது. நெல்லுக்குரிய ஆதாரவிலை சரியாக கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் சொல்லெணாத் துயரினை அடைந்துவருகின்றனர். மேலும் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்க்கடன் சரிவர வழங்காத நிலையிலும், வெளியில் கடன் பெற்று, உழுது பயிர் செய்த நெல்தானியங்களை அரசு கிடங்கில் விவசாயிகளிடம் சரிவர கொள்முதல் செய்யாததால், உழுதவனுக்கு உரிய பலன் கிடைக்காமல் உயிர்விட்ட விவசாயிகள் பலபேர் என்பதை நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது.


    
தமிழக அரசு கடந்த ஆண்டு அரசு பட்ஜெட்டில் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்படும் என்பதை இலக்காக வைத்தது. ஆனால் வயலும், வாழ்வும் என்ற நிலை மறந்து, விவசாயம் எனும் உயிரை மரணத்தின் வாசலுக்கு தள்ளியிருக்கிறது இந்த தமிழக அரசு. இந்த நிதியாண்டுக்கான 2018-2019 பட்ஜெட்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்காக திருந்திய நெல்சாகுபடி முறை 10 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும் என்றும், சாதாரண ரக நெல், குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,600 விலையிலும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,660 விலையிலும், அரசு கொள்முதல் செய்யும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை, நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக வழங்க 2018-2019 ஆண்டிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகமே என்றும், விவசாயிகளை ஏமாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.

 

நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதை பயிர் செய்வதற்காக கடுமையான சோதனைகளையும் தாண்டி, பயிரிட்டு, அதை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் கிடங்கிற்கு எடுத்து சென்றால், அங்குள்ள அதிகாரிகள் அதை கொள்முதல் செய்வதை தட்டிக்கழிக்கும் விதமாக பல துன்பங்களை விவசாயிகளுக்கு தருகின்றனர். குறிப்பாக நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதற்காக ஈரப்பதம் உள்ளது என்றும், பதர் நிறைந்துள்ளது என்றும் காரணம் காட்டி காக்கவைப்பது, நெல்மூட்டைகளின் தரங்களை குறைத்து சொல்வது, பின் அந்த நெல்மூட்டைகளை எடை போடுவதற்கு ரூபாய் 40 முதல் 50 வரை கையூட்டு கேட்பது போன்ற பல துன்பத்திற்கு விவசாயிகளை ஆளாக்குகின்றனர். இதனால் விவசாயிகள் விரக்தியடைந்து அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்துசென்று விவசாயிகள் வியாபாரிகளிடம் அரசு நிர்ணயித்த விலையை விட, குறைந்த விலைக்கு சான்றாக (ஒரு குவிண்டாலுக்கு) தமிழக அரசு ரூபாய் 1,600 என்று நிர்ணயித்தால், அவர்களுக்குள்ளாக உடன்படிக்கை செய்து ரூபாய் 1,300 என அவசரகதியில் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். பின்பு அதை மீண்டும் அரசு கொள்முதல் கிடங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 200 முதல் 300 வரை வித்தியாசத்தில் கையூட்டு கொடுத்து அரசு கிடங்குகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

 

இதனால் ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது மிகவும் வேதனையாக உள்ளது. சிலநாட்களுக்கு முன்புகூட இத்தகைய கடுமையான துன்பத்தினால் நாகை மாவட்டம், வேதாரண்யத்திற்கு அடுத்த கரியாப்பட்டினம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்கின்ற விவசாயி உயிரிழந்துள்ளார். பெரும்பாலும் டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்துன்பத்திற்கு ஆளாகி கடுமையான நெருக்கடியினால் அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டின் விலையின்படி, தங்களுக்கு நெல் கொள்முதல் விலை கிடைக்கப்பெறவில்லை என்பதையும் அரசின் திட்டங்கள், வெறும் ஏட்டளவில் உள்ள வாய் வார்த்தைகளாகவே உள்ளன என்றும், இதனால் லாபம் அடைவது இடைத்தரகர்களான வியாபாரிகள் தான் என்பதையும், தெள்ளத்தெளிவாக விவசாயிகள் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் எடுத்துரைத்து மனம் குமுறுவதை பார்க்கும் பொழுது, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும் என்கின்ற கூற்றை நினைவில் கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.’’

சார்ந்த செய்திகள்