முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது வீடு, சட்டமன்ற விடுதி உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்துவருகிறார்கள். இந்நிலையில், எம்.எல்.ஏ விடுதி அருகே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது என தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “ஆளுங்கட்சி என்ற மமதையில், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் இதுபோன்ற ரெய்டுலாம் செய்கிறார்கள். அதிமுக மீது எத்தனையோ அடக்குமுறைகள், காவல்துறை மூலம் கட்சியை அழிக்கலாம் என்ற முறையில் கடந்த காலங்களில் செய்தனர். அந்த எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறவில்லை. இது ஜனநாயகம் மலர்ந்த நாடு. ஆகவே இங்கு நீதிமன்றம், சட்டமன்றம், பத்திரிகைத்துறை மற்றும் நிர்வாகத்துறைகள் இருக்கின்றன. அதனால் நாங்கள் நீதிமன்றத்தில் எங்களது கருத்துகளை எடுத்துவைப்போம். அங்கு நிரபராதி என நிரூபிப்போம்.
அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் மத்தியில் அதிக பிரச்சினைகள் உள்ளது. அதைக் கவனிக்காமல், குறிப்பாக அதிமுகவின் மீதுள்ள இந்தக் காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற ரெய்டுகளை அரங்கேற்றி களங்கம் ஏற்படுத்த நினைத்தால் நிச்சயமாக அது நடக்காத விஷயம். புகார்கள் முன்பே கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் அதற்குரிய தீர்வை நீதிமன்றம் கொடுக்கும். நீதிமன்றம் இருக்கிற சூழ்நிலையில் இதுபோன்று செய்வது நிச்சயமாக கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்றுதானே பார்க்க முடிகிறது. நீதிமன்றத்திலேயே இவர்கள் எதிர் தரப்பினராக இருந்து புகார்கள் பற்றிய அவர்களது கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கலாமே. எதற்கு இதுபோன்று ரெய்டுகள் நடத்த வேண்டும். உயிரைவிட மானம் என்பது பெரியது. அதனால் நீதிமன்றத்திலே அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொடுத்திருக்கலாமே.
புகார்கள் கொடுக்கப்பட்ட பின்னர் குற்றங்களை நிரூபிக்க விசாரணை நடத்த வேண்டியதுதானே. அதைச் செய்யாமல் சமூக விரோதியைக் கையாள்வது போன்று காவல்துறையினரைக் குவித்து இதுபோன்று செய்வது கட்சி பெயரைக் கெடுக்கும் வகையில்தானே இருக்கிறது. சரி, அது கடந்த காலத்தில் செய்தார்கள். அதேபோன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அதிமுகவை அழிக்க முடிந்ததா? அது முடியாது. நீதிமன்ற தகவலின்படி அவர்கள் விசாரணை நடத்தலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அதிரடியாக பல இடங்களிலும் திடீரென ஏதோ பெரிய அளவில் இதுபோன்று ரெய்டுகளை நடத்தி அதிமுக பெயரைக் கெடுக்க நினைத்தால் அது ஜனநாயகப் படுகொலையாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்” என கூறினார்.