இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, ''எந்த காரணத்திற்காக அவர்கள் பிரிந்து சென்றார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும். என்னைப் பொறுத்தவரை கட்சியின் மீதோ கட்சியின் தலைமை மீதோ அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை. சிலபேர் உள்ளூர் பிரச்சனைகள் காரணமாக அதிருப்தியில் இருந்திருக்கலாம். ஆனால் அதிருப்தியில் இருந்தவர்களில் யார் யாரை விலக்குவது யார் யாரை சேர்த்துக்கொள்வது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். இனிமேல் அதிமுகவில் எந்த பிரச்சனையும் குழப்பமும் நிச்சயமாக இருக்காது. அதிமுக எழுச்சியோடு மீண்டும் எழுந்து நிற்கும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஓபிஎஸ் நிலைமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஓபிஎஸ்-ஐ நம்பிச் சென்றவர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்' எனக் கேட்டதற்கு பதிலளித்த செம்மலை, ''இந்த இயக்கத்தை சொந்தம் கொண்டாடியவர்கள், இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடியவர்கள் எல்லாம் இனிமேல் இந்த இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம். இரட்டை இலை சின்னத்தையும் உரிமை கோருவது இனிமேல் நடக்காது. காரணம் கட்சியும் சின்னமும் எடப்பாடி பழனிசாமியிடம் இந்திய தேர்தல் ஆணையத்தால் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் அவர்களது வழியைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்'' என்றார்.