Skip to main content

அதிமுக கவுன்சிலர்களை மிரட்டிய இரிடியம் ஆபரேஷன்! - கூண்டோடு திமுகவுக்கு தாவிய பின்னணி!  

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

Iridium operation to intimidate AIADMK councilors! - Background to the DMK with the cage!
ராம்

 

வெற்றிபெற்ற கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவதற்கு பணம் மட்டும் போதாது. ஆளும்கட்சியின் ஆட்சி அதிகாரத்துக்கு முன்பாக, என்னதான் பணத்தை இறைத்தாலும் எதிர்க் கட்சியினரின் பருப்பு வேகாது. எதிர்கட்சியினரின் தூண்டிலில் எந்தக் கவுன்சிலர் மீனும் மாட்டாத அளவுக்கு சாதுர்யமாகச் செயல்படுகிறார்கள் ஆளும்கட்சியினர். விருதுநகர் மாவட்டத்திலும் தாவல் அரசியல் நடந்த வண்ணம் உள்ளது.  

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில், திமுக கவுன்சிலர்கள் – 7, சிபிஐ – 1, அதிமுக கவுன்சிலர்கள் – 7 என்ற எண்ணிக்கையில் வெற்றிபெற்றனர். இவர்களில் சிபிஐ கவுன்சிலரை தங்கள் பக்கம் இழுத்து, பேரூராட்சியைக் கைப்பற்ற அதிமுக தரப்பு முனைந்தது. திமுக தரப்பிலோ அரசியல் மாய்மாலம் செய்து, மொத்த அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரையும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். முன்னிலையில் திமுகவில் இணையச் செய்துவிட்டனர். 


 

Iridium operation to intimidate AIADMK councilors! - Background to the DMK with the cage!

 

அதனால், அப்பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளும் திமுக கூட்டணியின் வசமானது. இதன் பின்னணியில், வெளிச்சத்துக்கு வராத ராம்பிரபு என்பவரது கிரைம் ஸ்டோரி புரட்டப்பட்டுள்ளது. 

 

தற்போது ரிமான்ட் ஆகியிருக்கும் ராம்பிரபு குறித்து அவருடைய வழக்கறிஞரும், வத்றாப் தெற்கு ஒன்றிய அதிமுக மாணவரணி செயலாளருமான ரவி நம்மிடம் பேசினார்.  “ராம்பிரபுவோட தம்பியும் தங்கையும் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் வெற்றிபெற்ற அதிமுக கவுன்சிலர்கள். தன்னுடைய கவுன்சிலர் தம்பி சிட்டிபாபுவை யூனியன் சேர்மன் ஆக்கும் முயற்சியில் இறங்கினார் ராம்பிரபு. கொடைக்கானல் ரிசார்ட் ஒன்றில் அதிமுக கவுன்சிலர்களோடு அவர் தங்கியிருந்தபோது, அமைச்சர் ஒருவர் தந்த அழுத்தத்தில் ராம்பிரபுவை விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

2019-ல் ராம்பிரபு மீது ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி.யும் இன்ஸ்பெக்டரும் ‘ஃபைலை க்ளோஸ் பண்ணுவதாகச் சொல்லி ராம்பிரபுவை அப்போது அனுப்பிவிட்டனர். அதிமுகவினரின் கைக்கு சுந்தரபாண்டியம் பேரூராட்சி போய்விடக்கூடாது என்ற திமுக தரப்பினரின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக, ராம்பிரபு மீதான அந்தப் பழைய புகாரை இப்போது தூசுதட்டி எடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நம்மால்தானே அண்ணன் ராம்பிரபுவுக்கு பிரச்சனை ஏற்பட்டு சிறைக்குப் போகவேண்டிய நிலை வந்தது என்று பயந்த அதிமுக கவுன்சிலர் சிட்டிபாபு, நாம் மொத்தமாக திமுகவுக்கு போய்விட்டால், அண்ணன் ராம்பிரபுவைப் பழிவாங்கும் படலம் நின்றுவிடும் என்று நினைத்தே திமுகவில் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார்” என்று நடந்ததை விவரித்தார்.

 

Iridium operation to intimidate AIADMK councilors! - Background to the DMK with the cage!
பொன். சக்திவேல் 

 

விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் ராம்பிரபு வழக்கு குறித்து பேசினார்கள். “2015-ல் இந்த மோசடி நடந்திருக்கிறது. சென்னை - பல்லாவரத்தைச் சேர்ந்த முகமது தமீமும், விருதுநகர் மாவட்டம் – கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த பாலமுருகனும் நண்பர்கள். பாலமுருகன் ராம்பிரபுவிடம் தமீமை அறிமுகம் செய்துள்ளார். அப்போது ராம்பிரபு  ‘என்கிட்ட பலகோடி மதிப்புள்ள இரிடியம் இருக்குது. இதை ஆஸ்திரேலியா இரிடியம் கம்பெனிக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் விற்றுவருகிறேன். என்னிடம் ரூ.1 லட்சம் தந்தால் ஒரு கோடி தருகிறேன். ரூ.10 லட்சம் தந்தால் ரூ.10 கோடி தருகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார். இதனை நம்பிய தமீம், ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும் ரூ.5 லட்சத்துக்கு வங்கிக் காசோலையாகவும் தந்திருக்கிறார். தமீமின் நண்பர் வேலுவும் ராம்பிரபுவிடம் ரூ.10 லட்சத்தை ரொக்கமாக கொடுத்திருக்கிறார். பலரும் ராம்பிரபுவிடம் ஏமாந்திருக்கிறார்கள். பணத்தை திருப்பிக் கேட்டபோது,  தமீம் கொலைமிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார்” என்றனர். 

 

அறக்கட்டளை, ஆன்மிகப் பேரவை அடையாளத்துடன் பிரதமர் மோடிக்கு பேனர் வைத்து  பா.ஜ.க. அனுதாபியாகவும் தன்னை ஃபோகஸ் பண்ணும் ராம்பிரபு குறித்து  தமீம் நம்மிடம் “ராம்பிரபு செய்த இரிடியம் மோசடிக்குப் பின்னால் இந்திய அளவில் பெரிய நெட்வொர்க் இயங்குகிறது. மிகமிக முக்கிய  புள்ளி ஒருவரும் இருக்கிறார். பிரபல நடிகர் ஒருவர் என்னைக் காட்டிலும் அதிகமாக, கோடி கோடியாக இழந்திருக்கிறார். உரிய ஆதாரங்களுடன் புதிதாக ஒரு புகார் கொடுக்கவுள்ளோம்” என்றார் ஆதங்கத்துடன்.  

 

சிவகாசி மாநகராட்சியிலும் வெற்றிபெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 11 பேரில் 9 பேர் உரிய கவனிப்பின் காரணமாக, திருத்தங்கல் முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் பொன் சக்திவேல் தலைமையில் பயணித்து, கெட்டிக்காரர்களாக திமுகவில் இணையவுள்ளனர்.

 

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அதிமுகவுக்கு எதிரான அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தபடியே இருக்கிறது திமுக!

 

 

சார்ந்த செய்திகள்